முழு மூளைச் செயல்பாடுடன் திகழ வழிகள்!



சின்னக் குழந்தைகளின் மூளை அலைகள் தீட்டா நிலையிலும், முதியவர்களின் மூளை அலைகள் பீட்டா நிலையிலும் உள்ளது என்பதை முந்திய பாராக்களில் படித்த போது தீட்டா, பீட்டா நிலை என்றால் என்ன என்ற கேள்வி எழுகிறது. அதைப் புரிந்து கொண்டால் மூளை பற்றிய பல முக்கிய விஷயங்கள் நமக்குப் புலப்படும்.

நமது பிரக்ஞையின் மட்டங்கள் நான்காகப் பிரிக்கப்படுகிறது. இந்த வெவ்வேறு பிரக்ஞையின் மட்டங்களில் மூளை அலைகளின் இயக்கம் வெவ்வேறு அளவுகளில் உள்ளது.

மேல் பரப்பில் உள்ள பிரக்ஞை அல்லது விழித்திருக்கும் போது இருக்கும் பிரக்ஞை, பீட்டா மட்டத்தில் இருப்பதாகக் குறிப்பிடப் படுகிறது. இந்த பீட்டா நிலையில் மூளை அலைகளின் இயக்கம் விநாடிக்கு 14 முதல் 21 சைக்கிள் என்ற அளவில் உள்ளது.

அடுத்து ஆழ்மன பிரக்ஞையின் போது அதாவது கனவு நிலையில் உள்ள பிரக்ஞையின் போது உள்ள நிலை ஆல்பா மட்டத்தில் இருப்பதாகக் குறிப்பிடப்படுகிறது. இந்த ஆல்பா நிலையில் மூளை அலைகளின் இயக்கம் விநாடிக்கு 7 முதல் 14 சைக்கிள் என்ற அளவிள் உள்ளது.

அடுத்து ஹிப்னோதெராபி வேலை செய்யும் நிலை அல்லது யோசனைகள் ஆற்றலுடன் செயல்படும் நிலையில் உள்ள பிரக்ஞை தீட்டா மட்டத்தில் இருப்பதாகக் குறிப்பிடப்படுகிறது. இந்த தீட்டா நிலையில் மூளை அலைகளின் இயக்கம் விநாடிக்கு 4 முதல் 7 சைக்கிள் என்ற அளவில் உள்ளது.

இறுதியாக ஆழ்ந்த உறக்கத்தில் உள்ள பிரக்ஞை நிலை டெல்டா மட்டத்தில் உள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது. இந்த டெல்டா நிலையில் மூளை அலைகளின் இயக்கம் விநாடிக்கு 1.5 முதல் 4 சைக்கிள் என்ற அளவில் உள்ளது.

மூளை முழுதுமாக இயங்குவதற்காகச் செய்யப்படும் பயிற்சிகள் பீட்டா நிலையிலிருந்து மிக சுலபமாக ஆல்பா மட்டத்திற்கும் பிறகு தீட்டா மட்டத்திற்கும் நம்மை ஏற்றி விடுகிறது. இதைப் புரிந்து கொண்டு விட்டால் நாம் தீட்டா நிலையை எய்துவதற்காக முழு முயற்சியை எடுத்து வெற்றி பெறுவோம்.

(தியானம் செய்யும் யோகிகள் மிக சுலபமாக அதி வேகத்தில் டெல்டா நிலையை அடைவதாக ஆராய்ச்சிகள் நிரூபிக்கின்றன.)

மூன்றாவது வழி : எதிர்காலத்திற்குச் செல்லுங்கள்

உங்களது மனம் அடைபட்டிருக்கும் சட்டத்திலிருந்து விடுபட்டு உங்கள் பார்வையைப் பரந்ததாக ஆக்குங்கள். உங்களுக்கு இன்று இருக்கும் பிரச்சினைகளை அலசி ஆராயுங்கள். பின்னர் இன்றிலிருந்து பத்து வருடங்கள் கழித்து நீங்கள் இருப்பதாக நினைத்துக் கொள்ளுங்கள்.

பத்து வருடம் கடந்த இப்போதைய புதிய சூழ்நிலையில் உங்களது பிரச்சினை மிகவும் பழையது. அதை விருப்பத்துடன் நினைத்துப் பாருங்கள். அதைக் கடந்து வந்து பத்து வருடம் ஆகி விட்டதல்லாவா? அதை எப்படித் தீர்த்திருப்பீர்கள் என்பதை நினைத்துப் பாருங்கள். இதை மிக்க ஓய்வான நிலையில் அல்லது தியானத்தின் போது அல்லது ஹிப்நாடிஸ நிலையில் ஆழ்ந்து எண்ணிப் பாருங்கள். உங்களது இன்றைய பிரச்சினை தீர வழி கிடைக்கும்!

நான்காவது வழி: உரக்கச் சொல்லுங்கள்

இந்த வழி புதிய மூளை தொடர்புகளையும் நெட்வொர்க்கையும் செயல்பட வைக்கும். பார்வையை விரிவுபடுத்தும். படைப்பாற்றலை மேம்படுத்தும்.

ஜெர்மானிய கவிஞரும் எழுத்தாளருமான கதே உரக்கப் படிப்பதன் மூலம் எண்ணப் பொறிகளைப் பெறுவது வழக்கமாம். தன்னுடைய மனக் கற்பனையில் தோன்றிய ஒரு நண்பருடன் அவர் உரக்கப் பேசுவாராம். தன்னுடைய கதையின் கரு, அதில் வரும் பாத்திரங்கள், அவர்கள் வாழும் இடங்கள் உள்ளிட்ட அனைத்தையும் உரக்கச் சொல்வாராம். இதுவே ஆழ்ந்த அறிவையும் சிறந்த கற்பனையையும் தனக்குத் தந்ததாக அவர் நம்பினார். இந்தக் கற்பனை யதார்த்தத்தையும் அவரது எழுத்துக்களில் புகுத்தியது.

No comments: